மட்டக்களப்பில் விபத்து: இருவர் படுகாயம்

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்ற வானக விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பகுதியிலேயே இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மரம் ஏற்றுவதற்கு சென்றுகொண்டிருந்த லொறியும் பொருட்கள் ஏற்றிவந்துகொண்டிருந்த கன்டைனர் லொறியும் நேருக்கு நேர் மோதி, மின்சார தூணில் மோதியுள்ளது.

இதன்போது இரண்டு லொறியும் பாரிய சேதமடைந்துள்ளபோதிலும் அதில் பயணித்தவர்களுக்கு உயிர் சேதம் ஏற்படவில்லை. ஆனால் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் பல பகுதிகளுக்கான மின்சாரம் வழமை நிலைமைக்கு திரும்பியுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் புகைமூட்டத்துடன் கூடிய பனி காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts