துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான சிறை தண்டனை..!!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோல்வியுற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனை தூக்கியெறிய சதித்திட்டம் தீட்டிய இராணுவ தளபதிகள், விமானப்படை தலைவர்கள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு துருக்கி நீதிமன்றம் கடுமையான சிறைத்தண்டனை விதித்துள்ளது.

தலைநகர் அங்காராவுக்கு அருகிலுள்ள ஒரு விமான நிலையத்திலிருந்து 2016ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் திகதி அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியை மேற்கொண்டதாக கிட்டத்தட்ட 500 பிரதிவாதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில், ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு தலைமை தாங்கி வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இவர்கள் மீதான வழக்கில் நேற்று (வியாழக்கிழமை) இறுதி விசாரணை நடந்தது.

இதில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து 337 முன்னாள் விமானிகள் மற்றும் பிற சந்தேக நபர்களுக்கு துருக்கி நீதிமன்றம் கடுமையான சிறைத்தண்டனை விதித்தது.

ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களைக் குறிவைத்து டசன் கணக்கான வழக்குகள் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள போதிலும், இந்த வழக்கு மிக உயர்ந்ததாக காணப்படுகின்றது.

மொத்தம் 475 பிரதிவாதிகள் விசாரணையில் இருந்தனர். அவர்களில் 365பேர் காவலில் உள்ளனர். வழங்கப்பட்ட 337 ஆயுள் தண்டனைகளில், 291 மோசமான ஆயுள் தண்டனைகள் அடங்கும்.

இது துருக்கிய நீதிமன்றங்களில் மிகக் கடுமையான தண்டனையை உள்ளடக்கியது. அதாவது பிணைக்கு வாய்ப்பு இல்லை என்று அரசு செய்தி நிறுவனம் அனடோலு தெரிவித்துள்ளது.

செய்தி நிறுவனமான அனடோலு மற்றும் பிற செய்தி நிறுவனங்கள், குறைந்தது 25 எஃப்-16 விமானிகளுக்கு மோசமான ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறியுள்ளது.

முன்னாள் விமானப்படை தளபதி அகின் ஓஸ்டுர்க் மற்றும் அங்காராவுக்கு அருகிலுள்ள அகின்சி விமான நிலையத்தில் உள்ள மற்றவர்கள் மீது, சதித்திட்டத்தை வழிநடத்தியது மற்றும் நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசாங்க கட்டடங்களுக்கு குண்டு வீசி, எர்டோகனைக் கொல்ல முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

துருக்கியின் அப்போதைய இராணுவத் தலைவரும் இப்போது பாதுகாப்பு அமைச்சருமான ஹூலுசி அகர் மற்றும் பிற தளபதிகள் ஆட்சி கவிழ்ப்பு நடந்த இரவில் பல மணி நேரம் சிறைபிடிக்கப்பட்டனர்.

குலனின் நெட்வொர்க்குடனான உறவுகள் தொடர்பாக ‘சிவிலியன் இமாம்கள்’ என்று அழைக்கப்படும் நான்கு தலைவர்களுக்கு, ஜனாதிபதியை படுகொலை செய்ய முயன்றது, கொலை செய்தது, மற்றும் அரசியலமைப்பு ஒழுங்கை அகற்ற முயன்றது ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு 79 மோசமான ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. எழுபது பேர் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு துருக்கி இராணுவத்தின் ஒரு பிரிவு, எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தது. ஆனால் மக்கள் ஆதரவுடன் ஜனாதிபதி எர்டோகன் அந்த புரட்சியை முறியடித்தார். எனினும், இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவில் வசித்து வரும் துருக்கியை சேர்ந்த முஸ்லீம் போதகரும் தொழிலதிபருமான ஃபெத்துல்லா குலனின் ஆதரவாளர்கள் தான், ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு காரணம் என தாயீப் எர்டோகன் குற்றம் சாட்டினார். அதனை தொடர்ந்து ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் தொடர்புடையதாக கருதப்படும் இராணுவ அதிகாரிகள், பொலிஸார் மற்றும் அரசாங்க ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

Related posts