சர்வதேச கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக நியூஸிலாந்தின் கிரேக் பார்கிளே நியமனம்..!!

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) புதிய தலைவராக நியூஸிலாந்தின் கிரேக் பார்கிளே நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் முதலாவது தனிப்பட்ட தலைவராக இருந்த இந்தியாவை சேர்ந்த ஷசாங் மனோகரனின் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து அவர் கடந்த ஜூன் மாதம் அந்த பதவியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து இடைக்கால தலைவராக இம்ரான் கவாஜா இருந்து வந்தார்.

ஐ.சி.சி. புதிய தலைவர் தேர்தல் குறித்து பலமுறை ஆலோசனை நடத்தப்பட்டாலும் ஒருமித்த முடிவு எடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது.

இந்த நிலையில் புதிய தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கடந்த ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் கிரிக்கெட் சங்க தலைவரும், இடைக்கால தலைவராக இருந்த இம்ரான் கவாஜா, நியூஸிலாந்து கிரிக்கெட் சபையின் இயக்குனர் கிரேக் பார்கிளே ஆகியோர் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர்.

ஐ.சி.சி.யின் 16 உறுப்பினர்கள் (டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 12 நாடுகள், 3 இணை உறுப்பு நாடுகள், தனிப்பட்ட ஒரு பெண் இயக்குனர்) வாக்களிக்க உரிமை படைத்தவர்கள். அதில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெறுபவர் தான் புதிய தலைவராக தேர்வாக முடியும். மின்னணு முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் சுற்றில் கிரேக் பார்கிளே 10 வாக்குகளும், இம்ரான் கவாஜா 6 வாக்குகளும் பெற்றனர்.

தனிப்பெரும் பெரும்பான்மை கிடைக்காததால் நடத்தப்பட்ட இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் கிரேக் பார்கிளே 11 வாக்குகளையும், இம்ரான் கவாஜா 5 வாக்குகளையும் தன்வசப்படுத்தினார்கள்.

இதையடுத்து ஐ.சி.சி.யின் புதிய தலைவராக நியூஸிலாந்தை சேர்ந்த சட்டத்தரணியான கிரேக் பார்கிளே தேர்வானார்.

அவர் 2012ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் இயக்குனராக உள்ளார். கிரேக் பார்கிளேவுக்கு இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகள் ஆதரவாக இருந்தன. இரண்டாவது சுற்றில் தென்னாபிரிக்கா அளித்த வாக்கு அவரது வெற்றியை உறுதி செய்தது. இம்ரான் கவாஜாவுக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு கரம் நீட்டின.

Related posts