கிளிநொச்சி மாவட்டத்திலே 90 பாலங்களுக்கான தேவை உள்ளது

42 கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் கடந்த அரசாங்க காலப்பகுதியிலே ஆரம்பிக்கப்பட்டது. இந்த பாலங்களின் வேலைத்திட்டங்கள் பல நிறைவு செய்யப்பட்டுள்ளன என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். கிராமங்களில் உள்ள பாதைகளுக்கு அமைக்கப்பட்ட பாலங்கள் அந்த கிராம போக்குவரத்திற்கு பொருத்தமில்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளன என்பதை நாம் பல இடங்களிலே சம்பந்தப்பட்ட பொறியியலாளர்களை அழைத்து தெளிவுபடுத்தியுள்ளோம். ஆனால் அந்த பாலங்கள் போக்குவரத்திற்கு ஏற்ற வகையிலே பிரதான பாதைகளில் அமைக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பாராளுமன்றில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

இந்த பாலங்களை உடைக்க வேண்டுமென்று நான் சொல்லவில்லை. ஆனால் கிளிநொச்சி மாவட்டத்திலே கிட்டத்தட்ட 90 பாலங்களுக்கான தேவை உள்ளது. வயல் நிலங்களையும், நீர் இறைக்கும் தரவைகளையும், தண்ணீர் பாயும் இடங்களையும் கொண்டது கிளிநொச்சி மாவட்டம். நீங்கள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடுகின்றீர்கள், தயவுசெய்து இந்த பாலங்களின் தேவைகளை உள்களுக்கு எழுத்து மூலமாக தருகின்றேன்.

நீங்கள் சொல்வது போல் வெளிநாட்டு கம்பனிகள், பிரித்தானியாவை மையமாக கொண்ட கம்பனிகள் தான் ஒப்பந்தத்திற்கு எடுத்துள்ளன. ஆனால் அவர்கள் நேரடியாக இந்த ஒப்பந்தத்தை இங்கே மேற்கொள்ளுவதில்லை. இவர்களுடைய உப ஒப்பந்தகாரர்கள் ஊடாகவே இந்த வேலைத்திட்டம் இங்கு நடைபெற்றது.

அதாவது இன்றுகூட நான் எனது கண்ணால் பார்த்தேன் வட்டக்கச்சி சந்தைக்கு அருகில் உள்ள பாலம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அது உடைந்து வெடித்த நிலையில் காணப்படுகின்றது.

அவ்வாறே தர்மபுரம் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள பாலம் எந்த நேரத்திலேனும் உடைந்து விழக்கூடிய நிலையில் காணப்படுகின்றது.

இவ்வாறு யாருமே இந்த சூழலையும் மக்களையும் சந்திக்காமல் தாங்களாகவே இது கொழும்பில் இருந்து வந்த வடிவமைப்பு மற்றும் இது மாகாண பணிப்பாளர் கொண்டு வந்தது இதனை நாங்கள் வடிவமைக்க வில்லை ஆகவே அப்படியே தான் நாங்கள் செய்யலாம் என்று அவர்கள் கூறினார்கள்.

இவ்வாறு பாலம் கட்டப்பட்டதால் இந்த பாலங்கள் மூன்று வருடங்களுக்குள்ளே உடைந்து விழும் நிலையிலும், பாவிக்க முடியாத நிலையிலும் உள்ளது என்பதை நான் தங்களது கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

நான் கொழும்பையும் யாழ்ப்பாணத்தையும் வேறு வேறு நாடு என்று சொல்லவில்லை.

கொழும்பில் இருந்து சொல்லப்பட்ட விடயங்கள் கொழும்பினுடைய பௌதீக சூழலுக்கும் நில அமைப்புக்கும், மக்கள் தொகைக்கும் ஏற்றது ஆனால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கும் நில அமைப்புக்கும் இது வித்தியாசமானது.

இதனால் தான் பாலங்கள் சரியான வகையில் மக்களுக்கு ஏற்ற வகையில் அமையப்பெறவில்லை என்பதை நான் குறிப்பிடுகின்றேன்.

adstudio.cloud

Related posts