அகிலவின் கடிதம் நிராகரிப்பு- நாடாளுமன்றம் செல்ல மறுப்பு தெரிவிக்கும் ரணில்..!

ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப்பெற்றுள்ள தேசிய பட்டியலில் அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்க நாடாளுமன்றிற்கு செல்லவில்லையாயின், பிரதித்தலைவரான ருவான் விஜேவர்தனவை அந்த பதவிக்கு நியமிக்கவேண்டும் என கோரப்பட்டுள்ளது.

சில உறுப்பினர்களால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தான் விலகுவதாக அறிவித்து அகிலவிராஜ் காரியவசம் வழங்கிய பதவிவிலகல் கடிதத்தினை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளதாகவும் அதன் உறுப்பினர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெற்றிருந்த நிலையில், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் எமது மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் தமக்கு கிடைத்த தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு இதுவரை யாரையும் தெரிவு செய்யவில்லை.

இதற்கமைய, ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என கட்சியின் சில உறுப்பினர்கள் கோரியிருந்தனர்.

எனினும் அதற்கு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மை நாடாளுமன்றம் செல்வதற்கு கட்சியின் உறுப்பினர்கள் முன்வைத்த யோசனையை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts