அனர்த்த நிலையை எதிர்கொள்ள தயார் நிலையில் யாழ்ப்பாணம்- அரச அதிபர்

யாழ். மாவட்டத்தில் தாழமுக்கத்தினால் ஏதாவது அனர்த்தம் ஏற்படுமாக இருந்தால் அதனை எதிர்கொள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தயார் நிலையில் உள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கம் மற்றம் புயல் உருவாக்கம் காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) மாலை ஊடகங்களுக்குக் கருத்தத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல் ஒன்று கிடைத்திருக்கின்றது.

எதிர்வரும் 25ஆம் திகதி வரை அவதானமாக மீனவர்களை கடலுக்குச் செல்லும் படியும் அதேநேரத்தில் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் சற்று உக்கிரமடைந்து புயலாக மாறப்கூடிய நிலை காணப்படுவதனால் அவதானமாகச் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, 24 மற்றும் 25ஆம் திகதிகளில் 100-150 மில்லி மீற்றர் மழை பெய்யக்கூடும் என்பதுடன் கடும் காற்று வீசும் எனவும் வடக்கு மாகாணத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, கடற்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மிக அவதானமாக தங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அனர்த்த முகாமைத்துவப் பிரிவினுடைய அறிவுறுத்தலையும் வளிமண்டலத் திணைக்களத்தினுடைய அறிவுறுத்தலையும் பின்பற்றி தங்களுடைய கடற்றொழில் செயற்பாடுகளை செயற்படுத்தப்படுத்தல் வேண்டும்.

குறிப்பாக, நெடுந்தீவுக்கான கடல் பயணமும் கடல் குழப்பம் மற்றும் கடும் காற்றின் காரணமாக தடைப்பட்டிருப்பதாக பிரதேச செயலாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், படகுப் போக்குவரத்தினை நிலமையினை அனுசரித்து செயற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.

கிழக்கு கடற் பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் வட பகுதியில் ஏதாவது அனர்த்தம் ஏற்படுமாக இருந்தால் அதனை எதிர்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும் வடக்கில் கரையோரப் பகுதிகளில் மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும் என்பதுடன் தங்களுடைய பிரதேசத்தில் ஏதாவது அர்த்தம் ஏற்படுமாயின் உடனடியாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரை தொடர்பு கொள்வதன் மூலம் அதற்குரிய நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ பிரிவு முன்னெடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Related posts