புலம்பெயர் தமிழர்கள் ஊடாக நாட்டை கட்டியெழுப்ப முடியும்- இரா.சாணக்கியன்

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டால் புலம்பெயர் தமிழர்கள் ஊடாக நாட்டை  பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப முடியுமென நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது, “இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டால் நாட்டுக்கு முதலீடுகள் வர ஆரம்பிக்கும்.

மேலும், 1970 கள் முதல் சமர்ப்பிக்கப்பட்ட  அனைத்து வரவு செலவுத்திட்டங்களிலும் பாதுகாப்பிற்காகவே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால்தான் நாம் இவ்வளவு கடனாளியாக இருக்கிறோம்.

இனப்பிரச்சினைக்கு தான் நாம்  முதலில் தீர்வு காண வேண்டும். ஜனாதிபதியாலும் இதனை செய்ய முடியாதென்றே  நினைக்கின்றேன்.

அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். முதலீடுகளை கொண்டுவருவதற்கு மாத்திரம் வரவு செலவுத் திட்டம் தேவையில்லை.

இதேவேளை,வெளிநாடுகளின் உதவியின்றி எம்மால் செயற்படவோ பொருளாதாரத்தை பலப்படுத்தவோ முடியாது. தேசிய பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டால் நாட்டுக்கு முதலீடுகள் வரும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts