வரவு செலவுத்திட்ட 2 ஆம் வாசிப்பு மீதான விவாதத்தின் மூன்றாம் நாள் இன்று

வரவு செலவுத்திட்ட 2 ஆம் வாசிப்பு மீதான விவாதத்தின் மூன்றாம் நாள் இன்றாகும்.

நேற்றைய தினம் இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட 2 ஆம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்ற கட்டட தொகுதிக்கு விஜயம் செய்திருந்தார்.

நேற்றைய விவாதத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன இம்முறை வரவு செலவுத்திட்டம் காலத்திற்கு ஏற்ற வகையில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு எந்தவித திட்டமும் தற்போதைய அரசாங்கத்திடம் இல்லை என்பது இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

கடந்த 17 ஆம் திகதி பிரதமரும் நிதி அசை்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் 4 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

மேலும் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

வரவுச் செலவு திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts