மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக டெங்கு நோயாளர்கள் அடையாளம்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு அபாயம் இல்லாவிட்டாலும் தொடர்ச்சியாக டெங்கு நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருவதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு தொடர்பான வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயும் விசேட கூட்டம் மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது .

இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வைத்திய அதிகாரி கே.கிரிசுதன், மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் க.சித்திரவேல் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் பிரதி ஆணையாளர் சிவராஜா,சுகாதார குழுவின் தலைவர் சிவம்பாக்கியநாதன்,மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்கள வைத்திய அதிகாரி தர்சினி, மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் பிரசாந்த் உட்படப் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், கல்வி திணைக்கள அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

தற்போது மழையுடன் கூடிய காலநிலை ஏற்பட்டு நிலையில் நுளம்பு பெருக்கத்தினை கட்டுப்படுத்தல் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

நீர் தேங்கி நிற்கும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு நீரை வெளியேற்றுதல், நீர் தடைப்பட்டுள்ள இடங்களைத் தூய்மைப்படுத்துதல், நுளம்பு பெருகும் இடங்களை அடையாளப்படுத்தித் தூய்மைப்படுத்தல் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் உட்பட பல்வேறு செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

எதிர்வரும் வாரங்களில் பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் அங்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 400க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் அடையாளம் காணப்பட்டபோதிலும் பெப்ரவரி தொடக்கம் இன்று வரையான காலப்பகுதியில் சுமார் 40பேர் வரையிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வைத்திய அதிகாரி கே.கிரிசுதன் தெரிவித்துள்ளார்.

மாநகரசபை சுகாதார திணைக்களத்திற்கு ஆளணிகளையும் வழங்குகின்ற அதேவேளை டெங்கு அடையாளப்படுத்தப்படுகின்ற புகை விசிறுவதற்கான எரிபொருள் வழங்குகின்றது.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் டெங்கு கட்டுப்படுத்தப்படுவதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வ தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கைவிடப்பட்ட நிலையில் உள்ள காணிகளை அதன் உரிமையாளர்கள் தூய்மைப்படுத்தாவிட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் மாநகரசபை முதல்வர் தெரிவித்துள்ளார்

Related posts