சீனாவுடன் 15 நாடுகள் ஒப்பந்தம் – தமிழர் விவகாரத்துக்கு செக்!

ஆசியான் அமைப்பில் அங்கம் வகிக்கும் பத்து தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் சீனாவையும் உள்ளடக்கி பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டன் மூலம் இந்தோ – பசுபிக் பிராந்திய அரசியல் பொருளாதாரச் செயற்பாடுகளில் அமெரிக்க மற்றும் இந்திய அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு, ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை குறித்த செயற்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை அரசு போர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டுமெனத் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வரும் அமெரிக்கா, இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதனால், இந்தோ – பசுபிக் பிராந்தியச் செயற்பாடுகளில் அடுத்த கட்ட நகர்வுக்காக இலங்கையின் ஒத்துழைப்பைப் பெற வேண்டிய நிலையிலுள்ளது.

இந்தியா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமல் விலகியதுடன், வர்த்தக ரீதியான செயற்பாடுகளுக்குத் தொடர்ச்சியாக அமெரிக்க ஆதரவையே கேரியும் உள்ளது.

வல்லரசுகளின் விட்டுக்கொடுப்பு

இதனால் அமெரிக்க – இந்திய அரசுகள், இலங்கையின் ஒத்துழைப்பைக் கோரும்போது, ஈழத்தமிழர்கள் குறித்த போர்க் குற்றச்சாட்டுக்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்திலும் அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டுமென இலங்கை அரசு நிபந்தனை விதிக்கலாம்.

அப்படி நிபந்தனை விதிக்கப்பட்டால், தமது பூகோள நலன்சார் விடயங்களுக்காக முக்கியத்தும் கொடுத்து இலங்கையின் நிபந்தணையை அமெரிக்க, இந்திய அரசுகள் ஏற்கும் நிலைமை வரலாம்.

ஏற்கனவே அவ்வாறானதொரு நிலைதான் இருந்தது. ஆனால் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னரான சூழலில், அமெரிக்க இந்திய அரசுகள் இலங்கையை மேலும் அரவணைக்கும் நிலை வரக்கூடும்.

பலவீனமான நிலைமை

பூகோள அரசியல் செயன்முறைகளை அவதானித்து அதற்கேற்ப தமிழ்த் தேசியக் கட்சிகள் அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவ்வாறான செயற்பாடுகள் மிகவும் பலவீனமாகவே உள்ளன என்பதை ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும்.

2009ஆம் ஆண்டு மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்ட பின்னரான சூழலிலேயே, இந்தோ- பசுபிக் பிராந்திய அரசியலில் இவ்வாறான ஆதிக்கச் செயற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன.

ஆனால் இலங்கைத் தீவில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான உரிய தீர்வை முன்வைக்க அமெரிக்காவும் இந்தியாவும் உரிய முறையில் செயற்பட்டிருந்தால், இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

ஆனால் இலங்கை அரசுடன் ஒத்துழைத்து வந்ததன் விளைவுதான் இந்தோ – பசுபிக் பிராந்திய நலன்சார் விடயங்களில் அமெரிக்க இந்திய அரசுகளுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் அச்சமான சூழல். இதனை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இந்தியா, அமெரிக்க நாடுகளின் ஜனநாயக செயற்பாடுகளுக்குத் தமிழ் மக்கள் ஒரு வலுவான ஆதரவு சக்தி என்பதும், தமிழ் மக்கள் ஒரு வலிமையான சக்தியாக இருக்கும் போது ஆசியப் பிராந்தியத்தின் ஜனநாயக நீரோட்டத்துக்குத் அது சாதகமாக அமையும் என்பதும் கவனத்தில் எடுக்கப்படவேண்டிய விடயங்கள் ஆகும்.

புதிதாகப் பதவி ஏற்கவுள்ள ஜோ பைடன் நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி தமிழ் மக்கள் விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், என்றுள்ளது.

Related posts