மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைப்பு..!!

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உட்பபட காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த மனுவை நாளை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்து மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுப்பதற்கான கட்டளையை வழங்கவேண்டும் என்று மல்லாகம் நீதவான் நீதிமன்றில் காங்கேசன்துறை பொலிஸார் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த மனு இன்று (வியாழக்கிழமை) மல்லாகம் நீதிமன்றால் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

எதிர் மனுதாரர்களாக வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் ஆகியவற்றின் நிர்வாகம், பூசகர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மனு அழைக்கப்பட்டபோது மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையிலான 6இற்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

‘பொலிஸாரின் விண்ணப்பதில் உள்ள விடயம் தொடர்பாக மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நாளை அழைக்கப்படவுள்ள நிலையில் பொலிஸார் இந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளனர்.

அதனால் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யபட்ட எழுத்தாணை மனுவின் முடிவை வைத்து இந்த விண்ணப்பதை விசாரணைக்கு எடுக்கவேண்டும்’ என்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் மன்றுரைத்தார்.

இதனையடுத்து, வழக்கை நாளை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related posts