திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது ..!!

திருவண்ணாமலை தீபத்திருவிழா அன்றும், அதற்கு முந்தைய நாளிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் சக்திவேல் தாக்கல் செய்த மனுவில் “திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கார்த்திகை தீப திருவிழா மற்றும் தேர் திருவிழாவை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், “தீப திருவிழா மற்றும் தேர் திருவிழா நடத்துவது தொடர்பாக அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் தெரிவிக்கவேண்டும்” என உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம், எதிர்வரும் 29 ஆம் திகதி தீப திருவிழா அன்று பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதற்கு முந்தைய நாளும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை  ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் 800 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும்  கோவில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

Related posts