ஈரான் அணு ஆயுத தயாரிப்பு மையங்களை குறிவைத்து ட்ரம்ப் தாக்குதல் நடத்த விரும்பினாரா..?

ஈரான் அணு ஆயுத தயாரிப்பு மையங்களை குறிவைத்து இராணுவ தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் ட்ரம்ப் தலைமையில் இடம்பெற்ற பாதுகாப்புத்துறையின் முக்கிய அதிகாரிகள் அவசர கூட்டத்திலேயே ட்ரம்ப் இதுகுறித்து கலந்துரையாடியதாக நியூயோர்க் டைம்ஸ் நாளிதல் குறிப்பிட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பொம்பியோ, பாதுகாப்புத்துறை செயலாளர், முப்படைகளின் தலைமை தளபதி பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் ஈரான் அணு ஆயுத மையங்கள் மீது இராணுவ ரீதியில் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் ஏதேனும் உள்ளதா? என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் ட்ரம்ப் கேட்டறிந்துள்ளார்.

ட்ரம்பின் விருப்பத்தால் அதிர்ச்சியடைந்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஈரான் அணு ஆயுத மையங்கள் மீதான தாக்குதல் மிகப்பெரிய போருக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்தனர். அதிகாரிகளின் எச்சரிக்கை மற்றும் ஆலோசனையை அடுத்து தனது முடிவில் இருந்து ட்ரம்ப் பின்வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஈரானுக்கும், அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, சீனா, ரஷ்யா ஆகிய வல்லரசு நாடுகளுக்கும் இடையிலல் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்ததிலிருந்து விலகியதிலிருந்து அதிகமாக அளவில் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தைக் ஈரான் கையிருப்பு வைத்திருப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றது.

இதனிடையே, ஈரான் குறைந்த அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அணுசக்தி ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்டதைப் போல் 12 மடங்கு கையிருப்பு வைத்துள்ளதாக ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு (ஐஏஇஏ) தெரிவித்துள்ளது.

அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ், குறைந்த அளவில் செறிவூட்டப்பட்ட 202.8 கிலோ யுரேனியத்தை மட்டுமே ஈரான் கையிருப்பு வைத்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அத்தகைய யுரேனியக் கையிருப்பை ஈரான் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2ஆம் திகதி நிலவரப்படி ஈரானிடம் 2,442.9 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு உள்ளது. இது, கடந்த ஒகஸ்ட் மாதம் 25ஆம் திகதி இருந்ததைவிட அதிகமாகும். அப்போது ஈரானிடம் 2,105.4 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு இருந்தது.

இதுமட்டுமில்லாமல், அணுசக்தி ஒப்பந்ததில் அனுமதிக்கப்பட்ட வீத்தைவிட அதிகமாக ஈரான் யூரேனியத்தை செறிவூட்டி வருகிறது.

Related posts