இங்கிலாந்து கால்பந்து அணியின் இளம் வீரருக்கு அறுவை சிகிச்சை..!!

இங்கிலாந்து கால்பந்து அணியின் தடுப்பாட்ட வீரரான ஜோ கோமேஸுக்கு முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர், அறுவை சிகிச்சை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடது முழங்காலில் தசைநாரை சரிசெய்ய இந்த அறுவை சிகிச்சை லண்டனில் மேற்கொள்ளப்பட்டதாக, மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

23 வயதான ஜோ கோமேஸ், லிவர்பூல் கால்பந்து அணிக்காகவும் விளையாடிவருகிறார். அவரது இந்த உபாதை லிவர்பூல் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

அந்த அணியில் பின்கள வீரர் விர்ஜில் வான் டிக் ஏற்கெனவே முழங்கால் காயத்தாலும், பெபியானோ தொடையில் ஏற்பட்ட காயத்தாலும், டிரென்ட் அலெக்சாண்டர் தொடையில் ஏற்பட்ட பிரச்சினையாலும் ஓய்வில் உள்ளனர்.

இந்தநிலையில் கோமேஸுக்கு காயம் ஏற்பட்டிருப்பது லிவர்பூல் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கோமேஸ் எப்போது மீண்டுவருவார் என எந்த நேர அளவும் வைக்கப்படவில்லை. இருப்பினும் அவர் 2020-21ஆம் பருவக்காலத்தின் எஞ்சிய போட்டிகளை தவறவிடக்கூடுமென நம்பப்படுகின்றது.

அயர்லாந்து அணியுடனான நட்புறவு கால்பந்து போட்டியில் விளையாடுவதற்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கோமேஸுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts