கொவிட் 19 நிலையை கருத்திற்கொண்டு எமது உணவுற்பத்தியை நாம் கட்டாயம் அதிகரிக்க வேண்டும்_திருமலை மாவட்ட அரச அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள .

திருகோணமலை மாவட்ட விவசாயக்குழுக்கூட்டம் இன்று(11) மாவட்ட அரசாங்க அதிபர் சமன தர்சன பாண்டிகோராள தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக தாம் கடமையேற்ற பின்னர் நடாத்தப்படும் முதல் கூட்டமாக இக்கூட்டம் அமைகின்றது.  திருகோணமலை மாவட்டத்தில் நெல் உற்பத்தி பிரதானமானதாக காணப்படுகின்றது.இருப்பினும் ஏனைய மாவட்டங்களின் நெல் உற்பத்தி உட்பட உணவுற்பத்தி மட்டங்களோடு எமது மாவட்ட உற்பத்தியை நோக்குமிடத்து திருப்திகரமான நிலையில் இல்லை. எனவே மாவட்ட மட்ட உணவுற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. இது தொடர்பில் உரிய திணைக்களங்கள் இலக்குகளை நிர்ணயித்து  விவசாயிகளை அறிவுறுத்தி செயற்படுத்த வேண்டும்.தற்போது நாட்டில் நிலவும் கொவிட் 19 நிலையை கருத்திற்கொண்டு  எமது உணவுற்பத்தியை நாம் கட்டாயம் அதிகரிக்க வேண்டும். மாவட்ட நுகர்வுக்கு மேலதிகமான உணவுற்பத்திகளை பிற மாவட்டங்களுக்கு சந்தைப்படுத்தப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக  இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மேலும் வாரி செளபாக்யா திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 22 கமநலஅபிவிருத்தி நிலையத்திலும் ஒரு நிலையத்திற்கு 05 குளம்/ அணைக்கட்டு என்றடிப்படையில் வேலைத்திட்டங்கள தெரிவுசெய்யப்பட்டு அடுத்தவருடம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் இதன் மூலம் குளங்களின் நீர் கொள்ளளவை அதிகரிக்கச்செய்து பயிர்ச்செய்கைக்கவசியமான நீரை தடையின்றி வழங்குவதே இத்திட்டத்தின் மூல நோக்கம் என்று அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இதன்போது விவசாய உற்பத்தியோடு தொடர்புபட்ட நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் முன்னேற்ற மீளாய்வுகள் உற்பத்தியை அதிகரிக்க நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டங்கள் உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எம். ஏ. அனஸ், மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே. பரமேஸ்வரன் , பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் , விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.Related posts