அமைச்சர் நாமல் ராஜபக்ஷ புத்தளம் விஜயம்..!!

ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ நேற்று (10) புத்தளத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

புத்தளத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் நாமல் நாஜபக்ஷ தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் புத்தளம் பிரதேச செலயகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி மற்றும் குறைபாடுகளை கேட்டறியும் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

இதன்போது, புத்தளம் மாவட்ட கிராமிய அபிவிருத்தி, புத்தளம் மாவட்ட விளையாட்டுத்துறையில் காணப்படும் பிரச்சினைகள், புத்தளம் மாவட்ட பாடசாலை, பாலர் பாடசாலை விளையாட்டு மைதானங்கள் மற்றும் வளங்கள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் கூட்டுறவுத்துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சர்கள் குழு, மேற்படி சம்பந்தப்பட்ட திணைக்கள தலைவர்களால் முன்வைக்கப்பட்ட குறைபாடுகளை கட்டம் கட்டமாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுகப்பதாக இதன்போது தெரிவித்தனர்.

இக்கலந்துரையாடலில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களான ரியல் அட்மிரல் சரத் வீரசேகர, வைத்தியர் சீதா அரம்பேபொல, பியல் நிசாந்த டீ சில்வா, லசந்த அழகியவன்ன, சனத் நிசாந்த பெரேரா, பியங்கர ஜயரத்ன உட்பட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் , நகர, பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் மாவட்ட அமைப்பாளர்கள், அரச திணைக்களத் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸின் அழைப்பின் பேரில் புத்தளம் நகரில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு விஜயம் செய்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, அங்கு நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள உள்ளக விளையாட்டரங்கு மற்றும் நீச்சல் தடாகம் என்பவற்றை நேரில் சென்று பார்வையிட்டார்.

புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸின் வேண்டுகோளின் பேரில் 2012ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியாக இருந்த தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவில் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே குறித்த மாவட்ட விளையாட்டு அரங்கை நிர்மாணிப்பதற்கான நிதியை ஒதுக்கீடு செய்திருந்தார்.

இந்நிலையில், குறித்த விளையாட்டரங்கில் மேலும் காணப்படும் குறைபாடுகளை முழுமையாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதன்போது கூறியுள்ளார்.

Related posts