நுவரெலியாவில் 12 வயதுடைய மாணவிக்கு கொரோனா..!!

நுவரெலியா- மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில், பிரொக்மோர் பிரிவில் மேலும் ஒரு கொரோனா வைரஸ் தொற்றாளர் இன்று (செவ்வாய்க்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் வசிக்கும், 12 வயதுடைய மாணவியொருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி பி.சி.ஆர்.பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்த நிலையில், இன்று காலை பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் வெளியாகின. இதில் குறித்த மாணவிக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.

மேலும், சிறுமியின் தந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது கடந்த 5 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அவர் அம்பாந்தோட்டையிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

கொழும்பில் மேசன் வேலையில் ஈடுபட்டிருந்த அவர், அண்மையில் வீட்டுக்கு வந்திருந்தவேளை வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் இதுவரையில் 16 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts