பரிஸ் பருவநிலை ஒப்பந்தம் – அதிகாரப்பூர்வமாக விலகியது அமெரிக்கா!

பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா அதிகாரப்பூா்வமாக விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்துவதற்காக சா்வதேச நாடுகள் பரிஸ் நகரில் மேற்கொண்ட பருவநிலை மாற்றத்திலிருந்து விலகும் முடிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடநத 2017-ஆம் ஆண்டு அறிவித்தாா்.

அந்த ஒப்பந்தத்திலிருந்து விலக நினைக்கும் நாடுகள், அதற்காக 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று அதில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்காவின் காத்திருப்பு காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா அதிகாரப்பூா்வமாக விலகியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், புவியின் சராசரி வெப்பநிலையை 2 டிகிரி செல்ஷியசுக்குக்குக் கீழே வைத்திருப்பதற்கான சா்வதேச ஒப்பந்தம், பிரான்ஸ் தலைநகா் பரிஸில் கடந்த 2016ஆம் ஆண்டில் கையெழுத்தானது.

அதற்காக, தங்களது நாடுகளின் தொழிற்சாலைகள் வெளியிடும் கரியமில வாயுவின் அளவை குறிப்பிட்ட அளவுக்குக் கட்டுப்படுத்த அந்த ஒப்பந்தத்தில் நாடுகள் ஒப்புக்கொண்டன. மேலும் அந்த ஒப்பந்தத்தில், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கையெழுத்திட்டன.

எனினும் இந்த ஒப்பந்தம் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு இழப்பை ஏற்படுத்தும், அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் எனவும் ட்ரம்ப் குற்றம் சாட்டி வந்தாா்.

மேலும் அவா் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர், அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

Related posts