வழக்கு தொடர நடிகை அமலா பாலுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி..!!

சென்னை, நவ. 3: தனது முன்னாள் நண்பர் மீது அவதூறு வழக்கு தொடர நடிகை அமலா பாலுக்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2014-ல் இயக்குநர் விஜய்யைக் காதல் திருமணம் செய்தார் நடிகை அமலா பால். இருவரும் 2017-ல் விவகாரத்து செய்துகொண்டார்கள். கடந்த வருடம் ஜுலை மாதம், மருத்துவர் ஐஸ்வர்யாவை மணந்தார் விஜய்.

திருமணப் புகைப்படங்கள் எனக் குறிப்பிட்டு அமலா பாலுடன் உள்ள புகைப்படங்களை மும்பை பாடகர் பவ்னிந்தர் சிங், மார்ச் 20 அன்று தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். பிறகு அந்தப் புகைப்படங்களை அவர் நீக்கிவிட்டார். இதையடுத்து, தனது திருமணம் குறித்த செய்தியை அமலா பால் விரைவில் தெரிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

கடந்த ஏப்ரல் மாதம் அளித்த பேட்டியில் தனது 2-வது திருமணம் குறித்த செய்திகளுக்குப் பதில் அளித்தார் நடிகை அமலா பால். அவர் கூறியதாவது:

எனது திருமணம் நடக்க இன்னும் சில காலமாகும். நான் தற்போது படங்களில் நடித்து வருகிறேன். அவற்றின் படப்பிடிப்புகள் முடிந்த பிறகு எனது திருமணம் பற்றி அறிவிப்பேன். எனது காதலைப் பற்றி பேசியுள்ளேன். அதேபோல எனது திருமணம் குறித்தும் அறிவிப்பேன். அதுவரை எனது திருமணம் குறித்த வதந்தியைப் பரப்ப வேண்டாம். சரியான நேரம் வரும்போது அதை அறிவிப்பேன் என்று கூறினார்.

இந்நிலையில் நடிகை அமலா பால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், முன்னாள் நண்பர் பவ்னிந்தர் சிங் தன்னுடன் எடுத்த புகைப்படங்களை தனக்கும் அவருக்கும் திருமணம் நடந்து விட்டதாகக் கூறி புகைப்படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும். மேலும் அவர் மீது உரிமையியல் அவதூறு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, உரிமையியல் அவதூறு வழக்கு தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

Related posts