மக்கள் வழங்கிய ஆணையை மீறி அரசாங்கம் செயற்படக்கூடாது- சஜித்..!!

ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை மீறி அரசாங்கம் செயற்படக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக் கொண்டுள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா ஒழிப்பு செயற்பாட்டுக்கு இணையாக, கொரேனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாடும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எனினும், கடந்த காலங்களில் இந்த இரண்டு செயற்பாடுகள் சரிசமமாக இடம்பெற்றதை நாம் அவதானிக்கவில்லை. இதனால், மக்களே இன்று, தங்களுக்கு உதவுமாறு அரசாங்கத்திடம் கேட்க ஆரம்பித்துள்ளார்கள்.

எனினும், அரசாங்கம் இதுவரை மக்களுக்கான நிவாரணத்தை வழங்கவில்லை. இதற்காக அல்ல இந்த ஆட்சியை மக்கள் அமைத்தார்கள்.

மக்களின் துயரங்களை முதலில் உணர்ந்துக் கொள்ளவேண்டும். அப்படியானால் மட்டுமே மக்களுக்கான ஆட்சியை அமைக்க முடியும்.

ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல் என இரண்டு தேர்தல்களில் மக்கள் இந்த அரசாங்கத்துக்கு பெரும்பான்மையான ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.

எனவே, அரசாங்கம் இந்த ஆணைக்கு இணங்க செயற்பட வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கையாகும்.

இதிலிருந்து பின்வாங்கக் கூடாது. கொரோனாவைக்கட்டுப்படுத்த அரசாங்கம் இன்று விசேட பூஜைகளை செய்து வருகிறது.

இதில் நான் குறைக்கூறப்போவதில்லை. எனினும், இதற்கு முன்னர் பி.சி.ஆர். இயந்திரங்களை அரசாங்கம் கொள்வனவு செய்திருக்கலாம். வென்டிலேட்டர்களை கொள்வனவு செய்திருக்கலாம். படுக்கைகளை வாங்கியிருக்கலாம். இதனை மேற்கொண்டிருந்தால் கொரோனா தொற்றை கட்டப்படுத்தியிருக்கலாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts