இந்தியா- அமெரிக்கா உட்பட 4 நாடுகளின் கடற்படை பயிற்சி ஆரம்பமாகும் நாள் அறிவிப்பு..!!

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும்  அவுஸ்ரேலியா ஆகிய 4 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் மலபார் கடற்பயிற்சி, எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.

இதில் முதற்கட்ட பயிற்சி எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை விசாகப்பட்டணத்தில் வங்காள விரிகுடா கடலில் நடைபெற இருக்கின்றது. இரண்டாம் கட்ட பயிற்சி நவம்பர் மாத மத்தியில் அரபிக்கடலில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பமாகும் முதற்கட்ட மலபார் பயிற்சியில், அமெரிக்காவின் யு.எஸ்.எஸ்.ஜான் மெக்கைன், அவுஸ்ரேலியாவின் எச்.எம்.ஏ.எஸ்.பல்லாரத், ஜப்பானின் ஒனாமி ஆகிய போர்க்கப்பல்களும் அதனுடன் இணைந்த ஹெலிகொப்டர் வரிசைகளும் பங்கேற்கின்றன.

இந்தியா சார்பில் ரான்விஜய், ஷிவாலிக், சுகன்யா, சக்தி, சிந்துராஜ் போன்ற கப்பல்களும் கலந்து கொள்கின்றன. மேலும் ஹாக் ஜெட், நீண்டதூர கடல் கண்காணிப்பு விமானமான பி.81, டோர்னியர் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களும் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்த பயிற்சியில் பங்கேற்கும் இந்திய குழுவுக்கு கிழக்கு பிராந்திய கட்டளை அதிகாரி வாத்சாயன் தலைமை தாங்குவார் என கடற்படை தெரிவித்துள்ளது.

Related posts