தாய்வானில் கடந்த 200 நாட்களாக கொவிட்-19 பாதிப்பு பதிவாகவில்லை..!!

தாய்வானில் கடந்த 200 நாட்களாக, யாருக்கும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுநோயின் புதிய அலைகளைக் கட்டுப்படுத்த உலகின் பெரும்பகுதி போராடி வரும் நிலையில், இந்த செய்தி பாதிப்பினால் ஆட்டம் கண்டுவரும் நாடுகளை வியக்கவைத்துள்ளது.

23 மில்லியன் மக்கள் வசிக்கும் தீவு கடைசியாக ஏப்ரல் 12ஆம் திகதி நிலவரப்படி, 553 தொற்றுகளை உறுதிப்படுத்தியுள்ளது. அவற்றில் 55 மட்டுமே உள்ளூர் பரிமாற்றங்கள். ஏழு இறப்புகள் பதிவாகியிருந்தன.

சீனாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை உயர தொடங்கிய ஜனவரி மாதமே தாய்வான் தனது எல்லைகளை மூடியது. பயணங்களை ஒழுங்குபடுத்தி வந்தது. இன்னமும் எல்லைகள் மீதான கட்டுப்பாடுகளை அப்படியே வைத்துள்ளது.

தொற்று ஏற்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களை தீவிரமாக கண்டுபிடித்தது. ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அவருடன் சம்பந்தப்பட்ட 150பேர் வரை தனிமைப்படுத்தியது. அனைவருக்கும் அரசாங்கத்தால் முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டன.

உள்ளூர் அளவில் தாய்வானில் கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும், கடந்த 2 வாரங்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த 20பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் சிகிச்சையில் உள்ளனர். இதனால் எச்சரிக்கையை தொடர்ந்து கடைப்பிடிக்கிறது.

இவ்வாறான கட்டுப்பாடுகள் மூலமும், முன்கூட்டியே எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கையினாலேயே தொற்றுபரவல் கட்டுப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts