துருக்கி ஜனாதிபதியை சர்ச்சைக்குரிய வகையில் சித்தரித்த பிரான்ஸ் பத்திரிக்கை..!!

தீவிர இஸ்லாமியம் குறித்த பிரான்ஸின் கடுமையான நிலைப்பாடு தொடர்பாக, துருக்கிக்கும் பிரான்சுக்கும் இடையே பதற்றம் நிலவிவருகின்ற நிலையில், பிரான்ஸின் சார்லி ஹேப்டோ பத்திரிக்கை துருக்கி ஜனாதிபதியை சர்ச்சைக்குரிய வகையில் சித்தரிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கேலிச்சித்திரத்திற்கு ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இது ஒரு வெறுக்கத்தகு தாக்குதல் என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.

எர்டோகன் மீதான சார்லி ஹேப்டோவின் கேலிச்சித்திரத்தை கண்டித்தும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு எதிராகவும் துருக்கியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், துருக்கியர்களுக்கு பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்ததன் பின்னணியில் இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபல பத்திரிக்கையான சார்லி ஹேப்டோ பல ஆண்டுகளுக்கு முன் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த கேலிச்சித்திரங்கள் வெளியிடப்பட்ட பின்னர் 2011ஆம், 2015ஆம் மற்றும் 2020ஆம் ஆகிய ஆண்டுகளில் அந்த பத்திரிக்கை அலுவலகம் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது.

குறிப்பாக 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் சார்லி ஹேப்டோ பத்திரிக்கையின் கார்ட்டூனிஸ்ட் உட்பட பத்திரிக்கை ஊழியர்கள் 12பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையில், முகமது நபியின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் காட்டிய காரணத்திற்காக, பிரான்ஸில் கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி வரலாற்று விரிவுரையாளரான 47 வயதான சாமுவேல் பேட்டி என்பவரை அப்துல்லாக் அன்சோரோவ் என்ற இளைஞர் படுகொலை செய்தார்.

ஏற்கனவே கிரேக்கம்- துருக்கி கடல்பரப்பு விவகாரம், அர்மீனியா-அசர்பைஜான் விவகாரத்தில் துருக்கி-பிரான்ஸ் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், விரிவுரையாளரின் படுகொலைக்கு பிறகு பிரான்ஸ் ஜனாதிபதி கூறிய கருத்துக்கள் இருநாடுகளுக்கிடையேயான மோதலை அதிகரிக்க செய்துள்ளது.

Related posts