களுத்துறை மாவட்டத்தில் சில இடங்கள் விடுவிக்கப்பட்டன..!!

களுத்துறை மாவட்டத்தில் மத்துகம-பதுகம புதிய கொலனி பிரதேசத்தைத் தவிர அங்கு தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட ஏனைய பிரதேசங்கள் அனைத்தும் விடுவிக்கப்பட்டுள்ளன என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அதற்கமைய மத்துகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஓவிட்டிகல, நவஜன உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

அண்மையில் மத்துகம பிரதேசத்திலுள்ள தனியார் வங்கி நிறுவனத்தின் சேவையாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் காரணமாக மத்துகம பிரதேச செயலகத்தில் ஓவிட்டிகல, பதுகம, புதிய கொலனி ஆகிய இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன.

மேலும் மத்துகம- கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்து ஒன்றின் சாரதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் அனுராதபுரத்துக்கு யாத்திரை மேற்கொண்ட 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

களுத்துறை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் தகவல்படி இதுவரையில் மத்துகம பிரதேசத்தில் மாத்திரம் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts