சட்ட விரோத மதுபான விற்பனை நிலையம் முற்றுகை.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதியில் நூதனமான முறையில் இயங்கி வந்த சட்ட விரோத மதுபான விற்பனை நிலையம் நேற்று (23) இரவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் அங்கிருந்து பெருமளவான மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளன.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இந்த சட்ட விரோத மதுபான விற்பனை நிலையம் இயங்கிவந்த நிலையில் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் போதையற்ற நாட்டினை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக பொலிஸ் திணைக்களத்தினால் தொடர்ச்சியான சுற்றிவளைப்புகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதனடிப்படையில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நளின் அசோக குணவர்த்தன தலைமையிலான பொலிஸார் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்கீழ் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதியில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த முற்றுகை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 170மில்லி லீற்றர் அளவுகொண்ட 750 மதுபான போத்தல்களும் பெரியளவிலான 48 மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டதுடன் இது தொடர்பில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நளின் அசோக குணவர்த்தன தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts