39 பந்துகள் இருக்கும் நிலையில் இமாலய வெற்றி பெற்ற RCB..!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 85 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 14 வது ஓவரிலேயே எட்டி அபார வெற்றி பெற்றது.

13 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.

நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 84 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

85 ஓட்டங்கள் என்ற எளிய இலக்குடன் பெங்களூரு தொடக்க ஆட்டக்காரர்கள் தேவ்தத் படிக்கல் மற்றும் ஆரோன் பின்ச் களமிறங்கினர். பின்ச் சற்று திணறினாலும், ரன் ரேட் நெருக்கடி இல்லாததால் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்படவில்லை. இருவரும் அவ்வப்போது பவுண்டரிகள் அடிக்க, ஓட்டங்கள் மெதுவாக உயர்ந்தன.

கடந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய லாக்கி பெர்குசன், பவர் பிளேவுக்குப் பிறகுதான் தனது முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரிலேயே பின்ச் (16 ஓட்டங்கள்) விக்கெட்டை வீழ்த்தினார். அதே ஓவரில் படிக்கல்லும் (25 ஓட்டங்கள்) ரன் அவுட் ஆனார்.

இதை அடுத்து, குர்கீரத் சிங்கும், கேப்டன் விராட் கோலியும் பாட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்தனர்.

13.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 86 ஓட்டங்கள் எடுத்த பெங்களூரு 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

குர்கீரத் 26 பந்துகளில் 21 ஓட்டங்களுடனும், கோலி 16 பந்துகளில் 17 ஓட்டங்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Related posts