மும்பையை பந்தாடியது பஞ்சாப் அணி..!!

இரசிகர்களுக்கு உச்சவிறுவிறுப்பை பரிசளித்த ஐ.பி.எல். ரி-20 தொடரின் 36ஆவது லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றது.

டுபாயில் நடைபெற்ற இப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் சார்பாக, ரோஹித் சர்மா 6 ஓட்டங்களையும், குயிண்டன் டி கொக் 53 ஓட்டங்களையும், சூர்ய குமார் யாதவ் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழந்தனர்.

இசான் கிசான் 7 ஓட்டங்களுடனும், குர்ணல் பாண்ட்யா 34 ஓட்டங்களுடனும், ஹர்திக் பாண்ட்யா 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

கிய்ரன் பொலார்ட் 34 ஓட்டங்களுடனும் குல்டர் நெய்ல் 24 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இறுதிவரை களத்தில் இருந்தனர்.

இப்போட்டியில் பஞ்சாப் அணியின் பந்துவீச்சில், மெஹாமட் ஷமி மற்றும் ஹர்ஸ்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், கிறிஸ் ஜோர்தான் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 177 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ஓட்டங்களை பெற்றது.

ஓட்ட எண்ணிக்கை சமநிலைப் பெற்றதால், வெற்றியை தீர்மானிப்பதற்கு சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது.

இதன்போது பஞ்சாப் அணி சார்பில், கே.எல். ராகுல் 77 ஓட்டங்களையும், மயாங் அகர்வால் 11 ஓட்டங்களையும், கிறிஸ் கெய்ல் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நிக்கலோஸ் பூரான் 24 ஓட்டங்களையும், கிளென் மெக்ஸ்வேல் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும், தீபக் ஹூதா ஆட்டமிழக்காது 23 ஓட்டங்களையும், கிறிஸ் ஜோர்தான் 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மும்பை அணியின் பந்துவீச்சில், பும்ரா 3 விக்கெட்டுகளையும், ராகுல் சஹார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

வெற்றியை தீர்மானிப்பதற்கு வழங்கப்பட்ட சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி, ஐந்து ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி, அதே ஐந்து ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனால் மீண்டும் வெற்றி ஓட்ட எண்ணிக்கை சமநிலைப்பெற்றது. இதனால் வெற்றியாளரை தீர்மானிப்பதற்கு மீண்டும் சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது.

இதில் இம்முறை கடந்த சுப்பர் ஓவரில் துடுப்பெடுத்தாடிய மற்றும் பந்துவீசிய வீரர்கள் அல்லாத வீரர்கள் பங்குபற்றினர்.
இதன்போது முதலாவதாக துடுப்பெடுத்தாடிய மும்பை அணி, 11 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனைத்தொடர்ந்து 12 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பஞ்சாப் அணி, இரண்டு பந்துகள் மீதமிருக்க வெற்றி இலக்கை கடந்தது.

ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு போட்டியில் இரண்டு சுப்பர் ஓவர் நடைபெற்ற போட்டியாக, இப்போட்டி வரலாற்றில் இடம்பிடித்தது.
அத்துடன் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளுமே சுப்பர் ஓவர் வரை நகர்ந்தன.

பஞ்சாப் அணிக்கு இது இரண்டாவது சுப்பர் ஓவர் போட்டியாகும். முன்னதாக பஞ்சாப் அணி, சுப்பர் ஓவரில் டெல்லி அணியிடம் தோல்வியடைந்திருந்தது.

இது பஞ்சாப் அணியின் மூன்றாவது வெற்றியாகும். இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 51 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 7 பவுண்ரிகள் அடங்களாக 77 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பஞ்சாப் அணியின் தலைவர் கே.எல். ராகுல் தெரிவுசெய்யப்பட்டார்.

Related posts