புங்குடுதீவு முடக்க நிலைமை வெகு விரைவில் நீக்கப்படும் ..!!

புங்குடுதீவு முடக்க நிலைமை வெகு விரைவில் நீக்கப்படும் என தெரிவித்த யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன், யாழிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு அநாவசியமாக பயணிப்பதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தற்போது யாழ். மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது.

இருந்தபோதிலும் எந்தநேரமும் தொற்று எந்த வழியிலும் ஏற்படலாம் என்ற அச்ச நிலைமை காணப்படுகின்றது.

இன்றைய நிலைவரப்படி யாழ். மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று வரை புங்குடுதீவு பகுதி தவிர்ந்த 468 குடும்பங்களைச் சேர்ந்த 1055 நபர்களை தனிமைப்படுத்தியிருக்கின்றோம். இந்த எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளது.

அதேபோல ஆரம்பத்தில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளானவர்கள் 28 ஆக இருந்தது தற்போது 9 ஆக குறைவடைந்துள்ளது.

ஒருவருக்கு மாத்திரமே யாழ்ப்பாண குடாநாட்டில் தொற்று உறுதியாகியுள்ளது. அவர் ஆடை தொழிற்சாலையில் கடைமையாற்றி புங்குடுதீவு பகுதிக்கு வருகை தந்தபோது தொற்றென கண்டறியப்பட்டுள்ளார்.

எனினும் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுகாதாரப் பகுதியினர் தொடர்ச்சியாக விழிப்புணர்வு செயற்பாடுகளையும் பரிசோதனைகளையும் முன்னெடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி கடற்படையைச் சேர்ந்த பெண் உத்தியோகத்தர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு பிரயாணம் செய்து, அதேதினம் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு ரயிலின் மூலம் திரும்பி இருக்கின்றார்.

எனவே அவர் பயணித்த ரயிலில் பயணித்தவர்கள் தங்களுடைய விபரங்களை பதியுமாறு ஏற்கனவே சுகாதார பிரிவினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் இன்னொரு கடற்படை உத்தியோகத்தர் கடந்த 6ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி சென்று அதே தினம் மீண்டும் யாழ்ப்பாணம் வந்திருக்கிறார் எனவே அவர் பயணித்த பேருந்தில் பயணித்தவர்கள் தொடர்பிலும் ஏற்கனவே சுகாதாரப் பிரிவினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர் பயணம் செய்த பஸ் வண்டியில் பயணம் செய்தவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய பதிவுகளினை மேற்கொள்ளும்போது தங்களையும் சமூகத்தையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts