ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமை..!!

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை அரசாங்கத்தின் பிரதான கடமையாக கருதுகின்றோம் என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சுற்றாடல் அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த வாரம் முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய பிரதேசங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் தகவல் சேகரிப்பதற்காக சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் மூலம் அறியக்கிடைத்தது. இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளேன்.

இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதற்கு இனியொருபோதும் நாம் இடமளிக்கப்போவதில்லை. ஊடகவியலாளர்களுக்கு இவை தொடர்பில் ஆராய்வதற்கு உரிமையுள்ளது.

அந்த உரிமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படமாட்டாது. சமூக வலைத்தள ஊடகவியலாளர்கள் சிலர் பொறுப்புடன் செயற்படாவிட்டாலும் பெரும்பாலான ஊடகவியலாளர்கள் மிகவும் பொறுப்புடன் செயற்படுகின்றனர்.

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை அரசாங்கத்தின் பிரதான கடமையாகக் கருதுகின்றோம். எனவே அவர்களுக்கு வேண்டிய இடங்களுக்குச் சென்று சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படுவது குறித்து உண்மை தகவல்களை சேகரிக்க முடியும்.

அந்த வாய்ப்புக்களை நாம் நீக்கப்போவதில்லை. அதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு நபருக்கு எதிராகவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.3Shares

Related posts