ஆர்ப்பாட்டங்களை முடிவுக்கு கொண்டுவர தாய்லாந்தில் அவசரகால நிலை பிரகடனம்..!

முடியாட்சிக்கான சீர்திருத்தங்கள் மற்றும் பிரதமர் பிரயுத் சான்- ஓச்சா பதவி விலக வேண்டும் என்று அழைப்பு விடுத்து மூன்று மாதங்களாக நீடித்த மாணவர்கள் தலைமையிலான வீதி ஆர்ப்பாட்டங்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சியில், தாய்லாந்து அரசாங்கம் அவசரகால நிலையை விதித்துள்ளது.

இதன்போது குறைந்தது 20 ஆர்வலர்களையும் இயக்கத்தின் இரண்டு தலைவர்களையும் ஆரம்பத்தில் கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் கூட்டங்களுக்கும், தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் செய்திகள் அல்லது ஒன்லைன் செய்திகளை வெளியிடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக போராட்டங்கள் அதிகரித்துள்ளன. நேற்று புதன்கிழமை பல்லாயிரக்கணக்கான மக்கள் தலைநகரான பெங்கொக்கில் அணிவகுத்து, பிரதமரின் அலுவலகமான அரசு மாளிகைக்கு வெளியே முகாம் அமைத்தனர்.

இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச வாகனங்களை தடுத்தனர். சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட காணொளிகளில், இது தெளிவாக புலப்பட்டது. இதனைத்தொடர்ந்து அரசாங்கம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது.

Related posts