சுகாதார கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!!

பண்டிகை மற்றும் குளிர் காலங்களில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் மக்கள் சுகாதார கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சரவை குழுவின் 21ஆவது ஆலோசனை கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  ஹர்ஷ் வர்தன் கருத்து தெரிவிக்கையில் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இதன்பொது தொடர்ந்து தெரிவித்த அவர்,  “கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில்  மத்திய அரசு தன் உறுதியான நடவடிக்கைகளால்  நோயின் தாக்கத்தைக் குறைத்துள்ளது.

கொரோனாவிலிருந்து  குணமடைந்தோர் சதவீதம் 86.88 ஆக அதிகரித்து உள்ளது. உலகிலேயே நம் நாட்டில் தான் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் சதவீதம் 1.53 ஆக உள்ளது.

தினமும் 15 இலட்சத்துக்கும் அதிகமானோரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆனாலும்  கொரோனா பரவல் தொடர்கிறது. பண்டிகை காலம் ஆரம்பிக்கவுள்ளது. அதையடுத்து குளிர்காலம் ஆரம்பிக்கவுள்ளது.

இந்த காலங்களில் வைரஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவத்துறையினர் எச்சரித்துள்ளனர். அதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டுவது என்ற பேச்சுக்கே இடம் அளிக்க கூடாது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Related posts