ஐ.பி.எல். ராஜஸ்தான் அணியின் வெற்றிபாதைக்கு முட்டுக்கட்டை போட்டது கொல்கத்தா அணி..!!

ஐ.பி.எல். ரி-20 தொடரின், 12ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 37 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

டுபாயில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, சுப்மான் கில் 47 ஓட்டங்களையும், ஓய்ன் மோர்கன் ஆட்டமிழக்காது 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சில் ஜொப்ரா ஆர்செர் 2 விக்கெட்டுகளையும், ராஜ்புட், உனட்கட், டொம் கர்ரன் மற்றும் ராகுல் டிவட்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 175 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 37 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சில், டொம் கர்ரன் ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சில், சிவம் மாவி, கம்லேஷ் நாகர்கோட்டி மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சுனில் நரைன், பெட் கம்மின்ஸ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் 2 விக்கெட்டுகளை சாய்த்த சிவம் மாவி தெரிவுசெய்யப்பட்டார்.

Related posts