ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பது கடன் பொறி அல்ல ஜனாதிபதி..!!

சீன நிதி உதவியுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதை சிலர் ‘கடன் பொறி’ என்று அழைத்த போதிலும், அது பெரும் அபிவிருத்தி திறன் கொண்ட ஒரு திட்டமாகும் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு தூதுவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “பயங்கரவாதம் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. விரைவான வளர்ச்சிக்கு எங்களுக்கு வெளிநாட்டு உதவி தேவைப்பட்டது.

இதன்போது, இலங்கையின் வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்ய சீனா முன்வந்தது. எங்கள் இருவருக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் சிலர் இந்த உறவை சீனா சார்பு என்று வர்ணித்தனர்.

மேலும், சீன நிதி உதவியுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பது பெரும் அபிவிருத்தி திறன் கொண்ட ஒரு திட்டமாகும்.

இலங்கை ஒவ்வொரு நாட்டிலும் நட்புடன்தான் உள்ளது. எமது நாடு, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது.

இந்த சூழலில், இலங்கை ஒரு மிதமான வெளியுறவுக் கொள்கையைத் தேர்ந்தெடுத்துள்ளது.

பரஸ்பர நன்மை பயக்கும் வளர்ச்சி ஒத்துழைப்பு எங்கள் முதலிடம். இந்த நாடு வெளிநாட்டு முதலீட்டிற்கு திறந்திருக்கிறது.

இந்தியப் பெருங்கடல் அனைத்து நாடுகளுக்கும் திறந்த மற்றும் சுதந்திரமான மண்டலமாக இருக்க வேண்டும்.

சுமார் ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் இந்தியப் பெருங்கடலை அமைதி மண்டலமாக முன்மொழிந்த முதல் நாடு இலங்கையாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts