அ.தி.மு..க கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெறவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்..!!

அ.தி.மு..க கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெறவில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து ஜெயக்குமார் மேலும் கூறுகையில், “அ.தி.மு.க. கூட்டத்தில் காரமும் இல்லை, ரசமும் இல்லை. அதிமுகவில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. காரசார விவாதம் நடைபெறவில்லை.

கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையாக இருந்து, வரும் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க வேண்டும். அதிமுக ஆலோசனை கூட்டத்தில் சசிகலா குறித்த பேச்சு எழவில்லை” என்றார்.

அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் அ.தி.மு.க. உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் நேற்று கூடியது.

இதன்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து காரசார விவாதங்கள் நடைபெற்றதாக கூறப்பட்டது. குறிப்பாக முதல்வர் வேட்பாளர் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் நியமனம் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

ஆனால் கூட்டத்தில் கட்சியின் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக, அ.தி.மு.க. வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts