பரம எதிரியான இஸ்ரேலுடன் உறவு.. ஈரான் விடுத்துள்ள அறிவிப்பு..!!

பரம எதிரியான இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டதன் மூலம் உண்டாகும் விளைவுகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளே பொறுப்பாகும் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் வெள்ளை மாளிகையில் இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில் ஈரான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் தினமும் குற்றங்களைச் செய்து வருகிறது எனவும் இஸ்ரேலுக்கு உங்கள் கைகளை எவ்வாறு கொடுக்க முடியும் எனவும் ஈரான் ஜனாதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.

மத்திய கிழக்குப் பகுதியில் ஆபத்தை விளைவிப்பதாக தெரிவிக்கப்படும் இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையே முழு வெளியுறவுத் தொடர்புகளை நிறுவுவதற்கான உடன்படிக்கை அண்மையிர் ஏற்படுத்தப்பட்டது. இதற்கு மத்தியஸ்தராக அமெரிக்கா இருந்தது.

இப்போது பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் 2 நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் இஸ்ரேலின் வெளியுறவுக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

ஏனெனில், பாலஸ்தீனத்துக்கு நாடு என்ற அந்தஸ்து வழங்கும் வரை இஸ்ரேலை அங்கீகரிக்கவோ, அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளவோ கூடாது என்ற முடிவில் மேற்கு ஆசிய நாடுகள் நீண்டகாலமாக இருந்தன. எனினும், 1979-ல் எகிப்துடனும் 1994-ல் ஜோர்டானுடனும் இஸ்ரேல் தனது முழுமையான வெளியுறவுத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது.

Related posts