கொரோனா முற்றாக அழிந்துவிடாது..!!

கொரோனா வைரஸ் அத்தனை விரைவில் அழிந்துவிடப்போவதில்லை. அது எப்போதுமே எம்முடன் இருந்துகொண்டு தான் இருக்கும் என இங்கிலாந்து அரசின் அவசர நிலைகளுக்கான அறிவியல் அலோசனைக் குழுவின் ஆலோசகர் பேராசிரியர் சோ் மார்க் வால்போர்ட் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், கொரோனா வைரஸூக்கு ஒரு தடவை தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டும் போதாது. சாதாரண காய்ச்சலுக்கு அவ்வப்போது தடுப்பூசி போன்றுக்கொள்வதைப் போன்று கொரோனா வைரஸை எதிர்கொள்ளவும் அவ்வவ்போது தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான் இந்தத் தொற்று நோயை எதிர்கொள்ள ஒரே வழி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் கொரோனா தொற்று நோய் நெருக்கடி கைமீறிப் போகலாம் எனவும் எச்சரித்த அவா், மொத்தமாக ஊரடங்கு அறிவித்து சமூகத்தை முடக்குவதைவிட, தூர நோக்குடன் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுப்பதே பயனளிக்கும் எனவும் கூறினார்.

கோவிட் -19 தொற்றுநோயை தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்தலாம். ஆனால் பெரியம்மை போன்று தடுப்பூசி மூலம் அழிக்கக்கூடிய தொற்று நோயாக கொரோனா இருக்கப்போவதில்லை என பி.பி.சி. ரேடியோ 4-இன் டுடே நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் எப்போதும் ஏதோவொரு வடிவத்தில் எங்களுடன் இருக்கும். இதற்கு நிச்சயமாக மீண்டும் மீண்டும் தடுப்பூசிகள் தேவைப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிந்துவிடும் என நம்புகிறேன் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நேற்று முன்தினம் கருத்து வெளியிட்டிருந்த நிலையில் இவ்வாறானதொரு கருத்தை பேராசிரியர் சர்மார்க் வால்போர்ட் வெளியிட்டுள்ளார்.

1918 இல் பல நாடுகளில் பரவிய ஸ்பானிஷ் காய்ச்சல் முடிவுக்கு வர இரண்டு ஆண்டுகள் ஆனது. எனினும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றமடைந்துள்ள இந்தக் காலத்தில் கொரோனா தொற்று நோயை இரண்டு வருடத்துக்குள் முறியடிக்கலாம் எனவும் கெப்ரேயஸ் நம்பிக்கை வெளியிட்டிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts