கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எவ்வாறு இலவச சிகிச்சை வழங்க முடியும்..?

தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எவ்வாறு இலவச சிகிச்சை வழங்க முடியுமென புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள  காணொளி பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த காணொளி பதிவில்  ஆளுநர் கிரண்பேடி  மேலும் கூறியுள்ளதாவது, “மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை  மீறுகின்றமையினாலேயே இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

அதாவது, ஊரடங்கு தளர்வு வழங்கியவுடன் பல இடங்களில், ஒரு மைல் தொலைவுக்கு முண்டியடித்துக் கொண்டு நின்று மதுபானப் போத்தல்களை வாங்கினர்.

விநாயகர் சதுர்த்திக்கு வெளியே வராமல் வீட்டிலேயே கொண்டாட அறிவுறுத்தியும் யாரும் அதனை மதிக்கவில்லை. அனைவரும் கடைக்குச் சென்று கும்பலோடு கலந்து பொருட்களை வாங்கி கொண்டாடினார்கள்.

இதனால் நோய் தொற்று அதிகமாகும். இப்படி நோய் பரவுவதால் ஒவ்வொரு நோயாளிக்கும் பணம் செலவிட வேண்டியுள்ளது. மேலும், மருத்துவர், தாதியர், மருந்து, மருத்துவமனை, உணவு என அனைத்தும் தேவைப்படுகிறது.

தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் சட்ட விதிகளை மீறுபவர்கள், எப்படி இலவச சிகிச்சை கேட்க முடியும்? விதியை மீறுவோர் எதற்காக அரசிடம் வருகிறார்கள்? பணம் கட்டி சிகிச்சை பெற வேண்டியதுதானே” என தெரிவித்துள்ளார்.

Related posts