ஜப்பானில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிக மோசமான பொருளாதாரச் சரிவு..!!

பொருளாதார வலிமையில் உலகின் மூன்றாவது பெரிய நாடான ஜப்பானின் பொருளாதாரம், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ளது.

கொவிட்-19 நோய்த்தொற்று முடக்கநிலை காரணமாக நுகர்வு மற்றும் வர்த்தகம் குறைந்ததே இதற்கு காரணம் என அரசு வெளியிட்ட புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் பொருளாதாரமானது ஏப்ரல் மற்றும் ஜூன் இடையிலான இரண்டாவது காலாண்டில் இந்தச் சரிவினைக் கண்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சரவை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இரண்டாவது காலாண்டில் 7.8 சதவீதம் சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சரிவானது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான சரிவு என ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய புள்ளிவிபர தகவல்கள் 1980ஆம் ஆண்டிலிருந்துதான் உள்ளன என அரசு தெரிவித்துள்ளது.

அந்த வகையில், முந்தைய மோசமான சரிவானது 2008-09ஆம் ஆண்டு, சர்வதேச நிதி நெருக்கடியின்போது ஏற்பட்டது.

ஏப்ரல் மற்றும் ஜூன் காலகட்டத்தில் ஜப்பானின் ஏற்றுமதியானது ஆண்டு வீதத்தில் 56 சதவீதம் குறைந்தது. அதேவேளையில், தனியார் நுகர்வானது ஆண்டு வீதத்தில் கிட்டத்தட்ட 29 சதவீதம் குறைந்தது.

Related posts