சட்டத்தில் சீர்திருத்தம் ஏற்படுமா? அலி சப்ரிக்கு நீதி அமைச்சு..!!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்றுக்கு தெரிவான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான இடைக்கால அரசில் முஸ்லிம் பிரதிநிதி எவரும் அமைச்சரவையில் உள்ளடக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரிக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு இன்று (புதன்கிழமை) காலை வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போதே அலி சப்ரி, நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு உழைத்த முக்கியஸ்தர்களில் அலி சப்ரியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அலி சப்ரியின் கீழ் முஸ்லீம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தை சீர்திருத்துவது தொடர்பாக குறைந்தபட்சம் ஏதேனும் முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts