படைகளை திரும்பப் பெறுமாறு இந்தியா சீனாவிடம் வலியுறுத்து..!!

தெப்சாங், தவ்லத் ஓல்டி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து படைகளை திரும்ப பெற சீனாவிடம் இந்தியத் தரப்பு வலியுறுத்தியுள்ளது.

கிழக்கு லடாக் எல்லையில் படைகளை திரும்ப பெறுவது தொடர்பாக இந்திய – சீன இராணுவ மூத்த அதிகாரிகள் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதன்போதே, தெப்சாங், தவ்லத் ஓல்டி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து படைகளை திரும்ப பெற இந்திய தரப்பு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு, லடாக் எல்லைப் பகுதி, வடக்கு சிக்கிம், உத்தரகண்ட், அருணாசல பிரதேசம் ஆகிய பகுதிகளில் இந்திய இராணுவம் மற்றும் விமானப்படையினர், அதிகபட்ச தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கிழக்கு லடாக்கில் உள்ள இந்திய  – சீன எல்லைப் பகுதியில் இரு நாட்டு படைகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக பதற்றம் நிலவி வருகிறது.

எல்லையில் இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டனர். இதையடுத்து போர் மூளும் அறிகுறிகள் தென்பட்டன. எல்லையில், அமைதியை நிலைநாட்ட இரு நாட்டு .ராணுவ மூத்த அதிகாரிகள் மட்டத்தில், ஐந்து கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

அதன்பின்னரும் சீன தரப்பு, தங்கள் படைகளை முழுமையாக மீளப் பெறவில்லை. கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில், சீன படைகள் பின் வாங்கின.

எனினும் பாங்காங் ஸோ, கோக்ரா, தேப்சாங் ஆகிய இடங்களில் உள்ள ‘பிங்கர் – 4’ முதல் ‘பிங்கர்- 8’ வரையிலான பகுதியில்  சீன படைகள் திரும்ப பெறப்படவில்லை. அப்பகுதிகளில் உள்ள படைகளை திரும்ப பெறுமாறு சீனாவிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts