சீனா, ரஷ்யா, ஈரான் ஆகியவை தலையிடுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு..!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சீனா, ரஷ்யா, ஈரான் ஆகியவை தலையிடுவதாக அமெரிக்க உளவு தடுப்பு பாதுகாப்பு மையம் குற்றம் சுமத்தியுள்ளது.

இது குறித்து அந்த மையத்தின் இயக்குனர் பில் இவானினா அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு ஒரு அறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், பல அன்னிய சக்திகள் யார் வெற்றி பெற வேண்டும் என்ற கருத்துகளை தனிப்பட்ட முறையில் வெளியிட்டு வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக சீனா, ரஷ்யா, ஈரான் ஆகியவற்றின் குறுக்கீடு கவலை அளிக்கிறது என்றும் ட்ரம்பை நம்ப முடியாது என சீனா கருதுவதால், அவர் மீண்டும் ஜனாதிபதியாவதை சீனா விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தேர்தலுக்கு முன்னரே, தனக்கு எதிரான அரசியல் தலைவர்களை ஓரங்கட்டி ஆதரவான கொள்கைகளை உருவாக்க தேவையான முயற்சிகளை சீனா செய்து வருவதாகவும் இத்தகைய நடவடிக்கை தனக்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது என்பதையும் சீனா அறிந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் அமெரிக்க உளவு தடுப்பு பாதுகாப்பு மையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷ்யா அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு எதிராக வேலை செய்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜோ பிடன், துணை ஜனாதிபதியாக இருந்தபோது, உக்ரைன் விவகாரத்தில் மூக்கை நுழைத்ததே இதற்கு காரணம் என்றும் அவர், ரஷ்யாவுக்கு எதிரான கொள்கைகளை கடைப்பிடிக்க உக்ரைன் நாட்டிற்கு உதவியுள்ளார். அத்துடன் ரஷ்ய ஜனாதிபதி புடினை எதிர்க்கும் கட்சிகளுக்கும் ஆதரவு அளித்தமையால், அவர், அமெரிக்க ஜனாதிபதியாக வருவதை, ரஷ்யா விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜோ பிடன் ஜனாதிபதியாவதற்கு ஈரான் ஆதரவளிக்கிறது என்றும் அமெரிக்க உளவு தடுப்பு பாதுகாப்பு மையத்தின் இயக்குனர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியானால், தனக்கு எதிரான பொருளாதார தடை நீடிக்கும், நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என ஈரான் அஞ்சுவதால், ட்ரம்ப் மற்றும் அமெரிக்க ஜனநாயக அமைப்புகளின் மாண்பை சீர்குலைக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டு வருகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சமூக வலைதளங்கள், ஊடகங்கள் ஆகியவற்றில் அமெரிக்காவிற்கு எதிராக பொய் பிரசாரங்கள் செய்கிறது என்றும் அமெரிக்க உளவு தடுப்பு பாதுகாப்பு மையத்தின் இயக்குனர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts