விமான விபத்தில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு..!!

கேரளாவில் இடம்பெற்ற விமான விபத்து சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று(வெள்ளிக்கிழமை) ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.1344 விமானம் வந்தடைந்தது.

184 பயணிகள் மற்றும் 6 விமான பணிக்குழுவினர் என மொத்தம் 190 பேர் பயணித்த விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தை வந்தடைந்து 10ஆவது ஓடுதளத்தில் தரையிறங்க முற்பட்டது.

இதன்போது ஓடுதளத்தில் வழுக்கிக்கொண்டு அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து குறித்த விமானம் விபத்துக்குள்ளானது.

குறித்த விமானம் இரண்டு பாகங்களாக உடைந்தது. இந்த பாரிய விபத்து தொடர்பாக தகவலறிந்து அருகில் இருந்த மக்கள் உடனடியாக சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, மீட்பு படையினர் விரைந்து சென்று விமான இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

விமானத்தில் சிக்கியிருந்த அனைவரையும் மீட்ட படையினர் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்களை ஆய்வு செய்த மருத்துவர்கள் 15 பேர் உயிரிழந்துவிட்டதாக முதல்கட்டமாக அறிவித்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 3பேர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விமானி, துணை விமானியும் உள்ளிட்ட 18பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏனைய 173 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts