சீனாவை சேர்ந்த பத்து பேருக்கு அமெரிக்கா தடை..!!

ஹொங்கொங் தேசிய பாதுகாப்பு சட்டம் விவகாரம் தொடர்பாக கடும் அதிருப்தியடைந்துள்ள அமெரிக்கா, ஹொங்கொங் தலைமை நிர்வாகி கேரி லாம் உட்பட சீனாவை சேர்ந்த பத்து பேருக்கு தடை விதித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை நேற்று (வெள்ளிக்கிழமை) வொஷிங்டனில் அமெரிக்கா நிதித்துறை செயலாளர் ஸ்டீவன் மனூஷின் வெளியிட்டார்.

இதன்போது, ஹொங்கொங் மக்களுக்கு அமெரிக்கா உறுதுணையாக நிற்கும் என்று அவர் உறுதியளித்தார்.

ஹொங்காங்குக்கு வழங்கி வந்த வர்த்த சிறப்பு அந்தஸ்தை அமெரிக்கா இரு வாரங்களுக்கு முன்பு பறித்தது.

இதன் தொடர்ச்சியாக தற்போது ஹொங்கொங் சுயாதீன ஆளுகையை குறைவாக மதிப்பிடும் வகையில் செயற்பட்டு வருவதாகக் கூறி, அந்த பிராந்திய பொலிஸ் ஆணையாளர் கிறிஸ் டாங், அரசியல் துறைச் செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க நிதித்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க நிதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஹொங்கொங்கில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை சீன பெருநிலப்பகுதியிடம் ஒப்படைக்க வகை செய்யும் தலைமை நிர்வாகி கேரி லாமின் நடவடிக்கை அந்த பிராந்தியத்தில் கடுமையான எதிர்ப்புணர்வை தூண்டியதுடன் மாதக்கணக்கில் போராட்டங்கள் ஏற்பட காரணமானது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts