ஜனாதிபதி மற்றும் பிரதமர் துரிதப்படுத்த வேண்டும்..!!

பொதுத்தேர்தலில் பெரும்பான்மை ஆதரவை மக்கள் வழங்கியுள்ளமையினால் ஜனாதிபதியும் பிரதமரும் காலம் தாழ்த்தாது மக்களுக்கான சேவைகளை துரிதப்படுத்த வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அநுர குமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “நிறைவடைந்த பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு சுமார் 4 இலட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளன. எனவே எமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஆனாலும் கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன்  மதிப்பிடுகையில் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும் கடந்த 2015 ஆண்டினை விட இம்முறை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

இதேவேளை புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற முதல் மக்களுக்கான அபிவிருத்தி  உள்ளிட்ட முக்கிய விடயங்களை மேற்கொள்வதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமென கூறியுள்ளது.

இந்நிலையில் குறித்த பொதுத்தேர்தலில் ஊடாக மக்கள் அதற்கான ஆணையை வழங்கியுள்ளனர்.

எனவே  எதிர்வரும் காலங்களிலும் காரணங்களைக் கூறிக் கொண்டிருக்காமல் மக்களுக்கான சேவையை பிரதமரும் ஜனாதிபதியும் துரிதப்படுத்த வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts