நுவரெலியா மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுகள் 2 மணிக்குள் வெளியாகும்

நுவரெலியா மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுகள் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணிக்குள் வெளியாகும் என மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் பிரதான வாக்கெண்ணும் நிலையங்கள் 4 இல் இன்று காலை 8 மணி முதல் வாக்கெண்ணும் பணி இடம்பெற்று வருகிறது.

இப்பகுதியில் சீரற்ற காலநிலை நிலவுகின்றபோதிலும் அதிகாரிகள் உரிய நேரத்தில் கடமைக்கு சமூகமளித்திருந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

நுவரெலியா – மஸ்கெலியா தேர்தல் தொகுதிக்கான வாக்குகள் காமினி தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள 48 வாக்கெண்ணும் நிலையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.

ஹங்குராங்கத்த மற்றும் வலப்பனை தேர்தல் தொகுதிகளுக்கான வாக்குகள் 25 வாக்கெண்ணும் நிலையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. கொத்மலை தொகுதிக்கான வாக்குகள் 13 நிலையங்களில் எண்ணப்படுகின்றன.

நுவரெலியா மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுகள் ஒன்றரை இரண்டு மணியளவில் வழங்கக்கூடியதாக இருக்கும் என நம்புவதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்தார்.

மாவட்டத்தில் 75சதவீத வாக்கு பதிவே இடம்பெற்றது. அதேபோல் நுவரெலியா மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றதுடன், எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts