கிறிஸ்டீனா பிளிஸ்கோவாவை வீழ்த்தி சாரா எர்ரானி காலிறுதிக்கு முன்னேற்றம்..!!

பெண்களுக்கே உரித்தான ‘ஃபெமினிலி டி பலேர்மோ’ பகிரங்க சர்வதேச டென்னிஸ் தொடரின், இரண்டாவது சுற்றில் இத்தாலியின் சாரா எர்ரானி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில், செக் குடியரசின் கிறிஸ்டீனா பிளிஸ்கோவாவும், இத்தாலியின் சாரா எர்ரானியும் பலப்பரீட்சை நடத்தினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டில், சிறப்பாக விளையாடிய கிறிஸ்டீனா பிளிஸ்கோவா, செட்டை 6-3 என கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் மீண்டெழுந்த சாரா எர்ரானி, செட்டை 6-4 என போராடிக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

இருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் பரபரப்படைந்தது.

இதில் யாரும் எதிர்பாராத வகையில் சிறப்பாக விளையாடிய சாரா எர்ரானி, 6-3 என செட்டைக் கைப்பற்றி வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்குள் நுழைந்த சாரா எர்ரானி, நாளை நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் பிரான்ஸின் பியோனா ஃபெரோவை எதிர்கொள்ளவுள்ளார்.

Related posts