3 ஆண்டுகால மரணவிபரங்களை வெளியிடுமாறு கோரிக்கை..!!

கொரோனா உயிரிழப்புகளின் தாக்கத்தை அறிந்துகொள்ள கடந்த 3 ஆண்டுகால மரண விபரங்களை வெளியிடுமாறு ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தொற்றுநோய் நிபுணர்கள்,  பொது சுகாதார நிபுணர்கள் என 200-க்கு மேற்பட்டோர் அரச அமைப்புகளுக்கு மேற்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா மரணங்களின் தாக்கத்தை புரிந்து கொள்ள சாதாரண காலங்களில் மரண விகிதம் எப்படி இருந்தது என்பதை அறிவது அவசியம். எனவே கடந்த காலங்களில் பதிவாகிய பிறப்பு, இறப்பு குறித்த விபரங்களை வெளியிடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான கொள்கை வழிகாட்டுதல்களை அரசுகள் உருவாக்க முடியும். எந்தெந்த இடங்களில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாம்,  பரிசோதனைகளை அதிகரிக்கலாம் என்பதை முடிவு செய்ய இயலும் எனவும் ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நேற்று ஒரேநாளில் மாத்திரம் 51 ஆயிரத்து 282 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 19 இலட்சத்து 6 ஆயிரத்து 613 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 849 ஆக பதிவாகியுள்ளதுடன், உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 820 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts