இந்தியா-இலங்கை இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த தீர்மானம்..!!


இந்தியா-இலங்கை இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரும் இந்திய கடற்படையின் தலைவருமான விகாஸ் சூட், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவை கடந்த ஜூலை 27-ஆம் திகதியும் இலங்கை கடற்படையின் துணைத் தலைவா் நிஷந்தா உல்கிடேனியை ஜூலை 29ஆம் திகதியும் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது இரு நாட்டு பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒத்துழைப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படும் வெளிநாட்டு இராணுவப் படை வீரா்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோா் இலங்கை இராணுவத்தினா் என்றும் இது இந்தியா – இலங்கை இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுவாக உள்ளதைக் காட்டுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனாவைத் தடுக்க மருத்துவ உதவிகளை இந்தியா கடந்த சில மாதங்களாக வழங்கி வருகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் இலங்கையில் நடைபெற்ற சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவா்கள் சங்க தொடக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, இலங்கையின் உள்நாட்டு, வெளிநாட்டு விவகாரங்களின் சோதனை காலங்களில் சீனா உதவியதாக தெரிவித்திருந்தமை தொடர்பாக இலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தமை  குறித்தும் அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது இலங்கை வீரா்களுக்கு சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் பல்வேறு வகையிலான உதவிகளைச் செய்ததாகவும் கமல் குணரத்ன தெரிவித்தாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts