இன்றைய காலநிலை தொடர்பாக முக்கிய அறிவிப்பு..!!

நாட்டின்  பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது.

அதேபோன்று ஊவா மாகாணத்தில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

தென் மாகாணத்திலும் பொலன்னறுவை, மன்னார், திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

பேருவளையில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்தை அண்டிய பகுதிகளில் உயர் அலைகள் காரணமாக கடல் அலைகள் கரையை அண்டிய நிலப் பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக செயற்பட வேண்டும்’ என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts