நியாயமான அரசியல் தீர்வு ஒன்றினை வென்றெடுக்க ஆணை வழங்குங்கள்..!!

நியாயமான அரசியல் தீர்வு ஒன்றினை வென்றெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் பலமான ஆணையை வழங்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், சர்வதேச நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் தற்போது தமிழர்கள் பக்கம் நிற்பதாக கூறினார்.

ஆகவே இந்த சந்தர்ப்பத்தினை நழுவவிடக்கூடாது என்றும் சர்வதேசத்தின் ஊடாக அரசிற்கு அழுத்தம் கொடுத்து எமக்கான தீர்வினை வென்றெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதற்காக எமது மக்களின் பலமான ஆணை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அவசியம் என்றும் அந்த ஆணையினை தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.

நியாமான அரசியல் தீர்வினை அரசாங்கம் தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் இல்லையேல் அது பாரிய பின்விளைவுகளை கொண்டுவரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை அரசியல் தீர்வு தொடர்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்க முடியாது என தெரிவித்த இரா.சம்பந்தன், தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிங்கள தலைவர்கள் மதிக்காதமையே தமிழீழ விடுதலை புலிகள் உருவாக காரணமாக அமைந்தது என்றும் சுட்டிக்காட்டினார்.

தற்போது ஜனநாயக வழியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதாகவும் சர்வதேசம் மதிக்கும் இந்த போராட்டத்தினை அரசும் மதித்து தமிழர்களுக்கான தீர்வினை வழங்க வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.

Related posts